நாளை பதவியேற்கிறார்கள் முஸ்லிம் எம்.பிக்கள்: கல்முனை விவகாரம் செல்வாக்கு செலுத்தலாம்?
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, தாக்குதலாளிகளுடன் தொடர்பிலிருந்ததாக அப்போதைய அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. ரிசாத்தை பதவிவிலக்க வலியுறுத்தி, கண்டியில் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார். இதற்கு சிங்கள தரப்பில் ஆதரவு பெருகியதையடுத்து, பெரும் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிய நிலையில், கடந்த ஜூன் மாதம் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவிவிலகினர்.
எனினும், பதவிவிலகிய சில நாளிலேயே ஐ.தே.கவின் இரண்டு அமைச்சர்கள் மீளவும் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.
ரிசாத் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லையென பதில் பொலிஸ்மா அதிபரால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார். இதையடுத்து பதவிவிலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீள பதவியேற்க முடிவு செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை, கொழும்பிலுள்ள பௌசியின் வீட்டில் நடந்த கலந்துரையாடலையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டது.
எனினும், ரிசாத் பதியுதீன் மீள அமைச்சு பதவியை பொறுப்பேற்பதற்கு மீளவும் எதிர்ப்பு எழ ஆரம்பித்துள்ளது. பொதுஜன பெரமுன, சு.க தரப்புக்கள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ரிசாத் பதவியேற்றால் அவருக்கு எதிராக மீளவும் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பெரமுன தெரிவித்திருக்கிறது.
தற்போது, ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ரிசாத் மீள பதிவியேற்றால் அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இதேவேளை, அமைச்சு பதவியை நாளை எச்.எம்.எம்.ஹரீஷ் பொறுப்பேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார். கல்முனை விவகாரத்தில் தெளிவான முடிவு ஏற்படாத பட்சத்தில் அமைச்சு பதவியை ஏற்கப் போவதில்லையென அறிவித்துள்ளார்.
from onlinejaffna.com https://ift.tt/2JEi53z