தமிழ் முதலமைச்சர் தேவை: கிழக்கில் சூடுபிடித்துள்ள கூட்டணி முயற்சி; ஒரேநாளில் மூன்று கூட்டங்கள்!



கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தரப்புக்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கள் தீவிரம் பெற்றுள்ளன. இந்த முயற்சியில், கடந்த 14ம் திகதி மாத்திரம் மூன்று வெவ்வேறு இடங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கிழக்கில் தமிழ் முதலமைச்சர் ஒருவர் தேவையென்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த கலந்துரையாடல்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்துமென கருதப்படுகிறது. கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம்களிற்கு உரியதென்ற கொள்கை முடிவை இரா.சம்பந்தன் கடந்த ஒன்பது வருடங்களாக கடைப்பிடித்து வருகிறார். கடந்த 2010 கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது, தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தமிழர் மகாசபை முயற்சி மேற்கொண்டு, இரா.சம்பந்தனையும் சந்தித்திருந்தது. அப்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி முஸ்லிம்களிற்கு உரியது, அதனால் பரந்தளவிலான கூட்டணி முயற்சிகளிற்கு உடன்பட போவதில்லையென நேரில் கூறியிருந்தார்.

இந்தநிலையில், கிழக்கிற்கு தமிழ் முதலமைச்சர் தேவையென்ற கோசம் வலுவடைந்துள்ள நிலையில், தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தீவிரம் பெற்றுள்ளன.

ஈழத் தமிழர் பேரவை என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடலில், ஒன்பதுஅரசியல் கட்சிகள் கலந்து கொண்டிருந்தன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), மக்கள் முற்போக்குக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும், வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் அமைப்பு, தமிழர் சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு, ஐனநாயகத் தமிழர் ஆகிய அமைப்புகளும் கலந்து கொண்டன.

ஒன்றிணைந்த வட கிழக்கு தமிழரின் பூர்வீக தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு, சமகாலத்தில் கிழக்கில் வாழும் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் இருப்பை வலுப்படுத்த ஓர் அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதில் காத்திரமாக இணைந்து பணியாற்றவும் பங்குபற்றிய அனைத்து அரசியல் தரப்புகளும் இணங்கியதோடு மேற்கொண்டு கூட்டணியை அமைப்பது சம்பந்தமாக காரியமாற்றவும் அதில் கட்சிகள் இணங்கியுள்ளன.

இதேவேளை, கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் அதேநாளில் கலந்துரையாடல் இடம்பெற்றது. மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடலில் கிழக்கு சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேநாளில் நடந்த மூன்றாவது சந்திப்பு, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலை வீட்டில் நடந்தது. பிரதேச அபிவிருத்தி தொடர்பான தன்னார்வ நிறுவனமொன்றின் கூட்டம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில், தமிழ் அரசு கட்சி பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. எனினும், கட்சியின் அனுமதியின்றியே அவர்கள் கலந்து கொண்டதாகவும், கூட்டம் முடிவதற்கு முன்பாகவே அவர்கள் வெளியேறி விட்டதாகவும் தெரிகிறது.




from onlinejaffna.com https://ift.tt/2xMxGZi