ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் ஏதோ இரகசியம் உள்ளது...?
இலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசாங்கம் திரட்டியது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் பிரதமர் ரணிலுக்கும், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் இரகசியத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை உரிய வகையில் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பியினால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த படியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பை ஜே.வி.பி நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தது.
ஜே.வி.பி தலைவர் - ‘எங்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பல்வேறு திரிபுபடுத்தப்பட்ட விமர்சனங்கள் உலா வருவதால் அதுகுறித்து நாங்கள் தெளிவுபடுத்த முயற்சிக்கின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால், இருவரும் தவறிழைத்துவிட்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முன்தினம் பகல் 12. 10 முதல் 12.30 மணிவரையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவை? இரு தலைவர்களும் நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். 1949ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசாங்கங்களுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்.
எதிர்கட்சியில் 118 பேர் சபையில் இருந்த போதிலும் 94 பேருக்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியிலிருந்தவர்கள். இந்த உறுப்பினர்களில் 11 பேர் சபைக்கு வரவில்லை. ஏன் அவர்களை மஹிந்த ராஜபக்ச அழைக்கவில்லை? 2018 ஒக்டோபர் 26 சூழ்ச்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட 11 பேரும் சபைக்கு வராமலிருந்தார்கள். இந்த அரசாங்கத்திற்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பொறுப்புகூற வேண்டும் என்பதை வெளியிடங்களில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்ற போதிலும் ஏன் அவர் அதனை சபையில் வாக்களிப்பின் ஊடாக தெரிவிக்கவில்லை?
from onlinejaffna.com https://ift.tt/30xvKQE